மது போதையில் துணிவு படம் பார்க்க சென்ற அஜித் ரசிகரை, திரையரங்கு ஊழியர் அனுமதிக்காததால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. எச்.வினோத் இயக்கத்தில் வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருந்தார். இப்படம் திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடி வருகிறது.
துணிவு படம் ரிலீஸ் ஆனபோது திரையரங்கம் முன்பு அஜித் ரசிகர்கள் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கு வெளியே ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கிருந்த லாரியின் மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பரத் என்ற அஜித் ரசிகர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு அஜித் ரசிகர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகரை சேர்ந்தவர் 45 வயதான வீரபாகு. ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்குக்கு துணிவு படம் பார்க்க சென்று உள்ளார். அப்போது அவர் மது குடித்து இருந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அவரை மட்டும் திரையரங்குக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீரபாகு அங்கிருந்து தனது வீட்டுக்கு வந்து தூக்கிட்டு உயிரை மாய்த்திக் கொண்டார்.
துணிவு படம் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த அவரது குடும்பத்தினர் வீரபாகு தூக்கில் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து தென்பாகம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீரபாகுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஏற்கனவே மனநல மருத்துவம் பார்த்து வந்ததும், அடிக்கடி தனக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை என்று கூறி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
துணிவு பட கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் உயிரிழந்த நிலையில், தற்போது துணிவு படம் பார்க்க விடாத விரக்தியில் மேலும் ஒரு அஜித் ரசிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.







