மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அதிமுக உயர்மட்ட குழு இன்று மாலை கூடுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. திமுக சார்பில் போட்டியிட கூடிய மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர், காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் அதிமுக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட சுமார் 50 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஒரு வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்றொரு வேட்பாளரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
தென்மாவட்டங்களை சேர்ந்த ஒருவருக்கு ராஜ்யசபா பதவி தர வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நிர்பந்தம் அளித்து வருகிறது.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உயர்மட்டக் குழு இன்று மாலை கூடுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வேட்பாளரை தேர்வு செய்து நாளைக்குள்ளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.







