ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்து எரித்த சம்பவத்தைத் தொடர்ந்து, இறால் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீனவப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆறு வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மருத்துவப் பரிசோதனை செய்த பின் உயிரிழந்த மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா எனத் தெரியவரும். ஆனால் அந்தப் பெண்ணின் உடலை போலீஸார் கைப்பற்றியபோது அவர் அரை நிர்வாணத்தில் இருந்ததால் பாலியல் வன்கொடுமை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரியவருகிறது. மருத்துவ அறிக்கைக்குப் பின் முழு விவரம் தெரிவிக்கப்படும்.
மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேர், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களால் தாக்கப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சைக்குப் பின் தான் முழு விசாரணை தொடங்கப்படும். இந்த ஆறு பேரில் மூன்று பேருக்கு கொஞ்சம் தமிழ் தெரிந்துள்ளது. மற்றவர்களுக்கு மொழிப் பிரச்சினை இருப்பதால் அவர்களிடம் விசாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்களை விசாரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
உயிரிழந்த பெண்ணின் இரண்டாவது மகள் கூறுகையில், தனது தாயைக் கொன்றவர்களை கடுமையான நடவடிக்கை எடுத்து தூக்கில் போட வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இந்நிலையில், வன்கொடுமை செய்து கொன்று எரித்த சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றிய இறால் பண்ணை முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து மீன் வளத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, இறால் பண்ணைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீல் வைத்தார்.








