அதிமுக தலைமை அலுவலகத்தை கொள்ளையடித்த ஒபிஎஸ்-ஐ எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு முடிந்த பின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர்,
அண்ணா மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை
செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அலுவலகத்தில் கல் எறியப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு, அதை ஓபிஎஸ்ஸின் தரக்குறைவான செயலாக ஒவ்வொரு அதிமுக தொண்டரும் பார்ப்பதாக பதில்அளித்தார். இந்த சம்பவத்தின் திரைக்கதை, இயக்கம், வசனம் மற்றும் தயாரிப்பு என அனைத்துக்கும் காரணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் தான் என விமர்சனம். இதில் நடிகர் யார் என்றால், ஆஸ்கர் விருது வாங்கும் தகுதி பெற்ற ஒபிஎஸ் என விமர்சனம் செய்தார்.
அதிமுகவால் அடையாளப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட ஒபிஎஸ், அதிமுக அலுவலக கதவை உடைப்பது, ஆவணங்களை கொள்ளையடிப்பது, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக தலைமை அலுவலகத்தை இடிக்கும், இந்த செயலை எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். இது வன்மையாக காண்டிக்கதக்கது. இதை நீதிமன்றம் மூலம் சட்டப்படியாக எதிர்கொள்வோம். ஓபிஎஸ் தரப்பினர் அதிமுகவிற்கு அப்பாற்பட்டவர்கள். எனவே, அவர்களது பேச்சுகளை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.
பொருளாளர் என்கிற அடிப்படையில் ஒபிஎஸ்க்கு பொது குழு மேடையில் இருக்கை
அமைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. அவரை கட்சியில் இருந்து நீக்கியாகிவிட்டது.
இனி அதிமுகவிற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத நபர் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்படாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, யார் யாரெல்லாம் கட்சி விரோத செயலில் ஈடுபட்டார்களோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.








