பத்திரிகையாளர் முகம்மது சுபைரை 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும், ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான முகம்மது சுபைர், மத உணர்வை புண்படுத்தும் நோக்கில் ட்விட்டரில் பதிவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 27ம் தேதி டெல்லி போலீசாரால் முகம்மது ஜூபைர் கைது செய்யப்பட்டார்.
மத உணர்வை புண்படுத்தியது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்திலும் அவருக்கு எதிராக ஒரு வழக்கு பதியப்பட்டது. லக்கிம்பூர் கெரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், இந்த வழக்கில் தமக்கு ஜாமின் வழங்கக் கோரியும் முகம்மது சுபைர் சீதாபூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை சீதாபூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்றம் முகம்மது சுபைருக்கு 5 நாட்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. எனினும், இந்த நிபந்தனை ஜாமீன், சீதாபூர் மாவட்ட வழக்குக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இதனிடையே, உத்தரப்பிரதேசத்தின் மொகம்மதி காவல் நிலையத்தில், முகம்மது சுபைருக்கு எதிராக ஆஷிஷ் கடியார் என்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் புகார் அளித்திருந்தார். அவர் தனது புகாரில், தனது ஆல்ட் நியூஸ் சேனல் மூலம் சமூகத்தை முகம்மது சுபைர் தவறாக வழிநடத்துவதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த வழக்கில், பத்திரிகையாளர் முகம்மது சுபைரை 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.








