திமுகவை உறுதியுடன் எதிர்க்க அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை அவசியம் என்று புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், “திமுகவை உறுதியோடு எதிர்க்க அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம். அதிமுக பொதுச் செயலாளர் பதவி காலத்தின் கட்டாயம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, மக்களின் நன்மதிப்பை பெற்ற எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வி. குப்பன், “திமுகவை வீழ்த்தி அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க
எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும்” எனக் கூறினார். பொதுக் குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான தீர்மானம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்கையன் எடப்பாடி பழனிசாமி அணியில் சேர்ந்து விட்டதாக கூறி அவருக்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சையது கான், தேனி மாவட்டத்தில் இருந்து இரண்டு நிர்வாகிகள் மட்டுமே எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றுள்ளதாகவும் மீதம் உள்ள அத்தனை பேரும் ஓபிஎஸ் அணியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டத்தில் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தாங்கள் கட்டுப்படுவோம் எனவும் தெரிவித்தார்.
-மணிகண்டன்