அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருக வருக என தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் பேருந்து நிறுத்தத்தில் சேலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்த அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை வரவேற்கும் விதமாக அதிமுக தொண்டர்கள் திடீரென ஒன்று சேர்ந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்எல்ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான பிரபு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமியை முன்னாள் எம்எல்ஏ பிரபு, அதிமுகவின் ஒற்றைத் தலைமை நாயகன் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கோஷமிட்டதால் அங்கிருந்த தொண்டர்களும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருக வருக என கோஷமிட்டனர்.
இதனால் பேருந்து நிறுத்தத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் வருகையை அறிந்த தொண்டர்கள் சற்று நேரத்தில் ஒன்றுகூடி வரவேற்பு அளித்த நிகழ்வு தியாகதுருகம் வட்டாரப் பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
-ம.பவித்ரா







