முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

மன்னார் வளைகுடாவில் “கடற்கொள்ளையன்”

தமிழகத்தின் மன்னார் வளைகுடா எப்போதும் நமக்கு பல ஆச்சரியங்களை உள்ளடக்கிய கடல் சார் உயிரினங்களும், பறவையினங்களும் கொண்ட பல்லுயிர் வளம் மிக்க ஒரு கடல் பகுதியாகும். இயற்கை ஆர்வலர்  இரவீந்திரனின் “இறகுகள்” அம்ரிதா இயற்கை அறக்கட்டளை  இப்பகுதியில் வாழ்விட, மற்றும் வலசை வரும் பறவைகளை பற்றிய ஆய்வுகளை 2015ம் ஆண்டு முதல் தமிழக வனத்துறையின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்கு மாநிலத்தின் பல கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த செயலை ஆண்டுதோறும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு தொடர் பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்ட இறகுகள் இரவீந்திரன் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த பறவை ஆய்வாளர் பைஜு அவர்களின் தேடுதலில், அரிய வகை பறவையினமான “ஆர்டிக் ஸ்குவா” என்னும் கடற்காக இன பறவை முதல் முறையாக தனுஷ்கோடி பகுதியில் கண்டு அறியப்பட்டுள்ளது. இப்பறவையினங்கள் உலகின் வடதுருவ முனையில் உள்ள ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்பவை. பெரும்பாலும் ஆழ் கடல் பரப்பிலே வாழும் இவைகள் இனப்பெருக்க காலங்களில் மட்டுமே நிலப்பரப்புக்களை நாடி வருகின்றன. இப்பறவையினங்கள் உணவுக்காக பிற கடற்காகங்களிடம் இருந்தும், ஆலா பறவைகளிடம் இருந்தும் அவற்றின் உணவினை வழிமறித்து திருடிக் கொள்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனவே இப்பறவையினை ஐரோப்பியர்கள் கடற்கொள்ளையன் என அழைக்கிறார்கள். ஆனால், இவைகள் இனப்பெருக்க காலத்தில் குஞ்சுகளுக்கு இரையூட்ட சிறிய வகை ஊர்ந்து செல்லும் உயிர்களையும், பாலூட்டிகளையும், பறவைகளின் முட்டை, குஞ்சுகளை வேட்டையாடுகின்றன. உலகில் வட துருவத்திலும், தென் துருவத்திலும் இனப்பெருக்கம் செய்யும் ஒரே பறவையினம் இது என்றும் சொல்லலாம். இந்த ஆண்டு இத்தகைய அரிய பறவையினம் தமிழகத்தில், தூத்துக்குடி, பழவேற்காடு, மற்றும் இராமநாதபுரம் கடற்பகுதிகளில் காணப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

கடந்த சில ஆண்டுகளாக மன்னார் வளைகுடாவில் தொடர்ந்து மேற்கொள்ளும் ஆய்வுகளின் மூலம் வலசை வரும் பறவையினங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதிகளில் ஏற்பட்டு வரும் மனித தேவைகளுக்கான வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் முறையில்லா நடவடிக்கைகளினால் பவளப்பாறைகள் சூழ்ந்த கடற்பகுதிகள் பெரும் அழிவை எதிர் கொள்கிறது. சாலை மற்றும் இரயில் பாதைகள் அமைக்கும் திட்டங்களினால் கடற்கரையின் மணல் பகுதிகள் அழிந்து கரையின் மேற்பரப்பு இறுகி கல்லும், சரளை மண்ணுமாக மாறிப் போகிறது. எனவே கடலில் வாழும் சிறிய மெல்லுடலிகளும், நண்டுகளும், பூச்சியினைகளும் அழிந்து போகின்றன. இதன் அழிவால் வட துருவங்களில் இருந்து வலசை வரும் பறவைகளின் உணவு ஆதாரம் அழிந்து போகிறது.

இதுகுறித்து பேசிய இறகுகள் இரவீந்திரன், சுற்றுலா பயணிகள் இங்கே வீசிச் செல்லும் உணவுக் கழிவுகளும், பிளாஸ்டிக் குப்பைகளும் இப்பகுதியின் அழகையும், சூழலையும் நாசம் செய்கின்றன. அரிய வகை பங்குனி ஆமைகள் முட்டையிடும் கடற்கரையோரம் முழுவதும் தெருநாய்களின் வேட்டை நடைபெறுகிறது. இதற்கு நகராட்சியின் மூலம் சில அடிப்படை வசதிகளும், கடும் அபராதங்களும் விதிக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற மனிதர்களால் ஏற்படுத்தப்படும் சூழல் நாசம் தடுக்கப்படும். மன்னார் வளைகுடா தேசிய பூங்காவின் காப்பாளர் ஜெகதீஷ் பகான் அவர்கள், சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தனுஷ்கோடி கொண்டு செல்வதை தடை செய்ய முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். ஆனால், தீவுப் பகுதிகள் முழுவதும் சுகாதாரப்பணிகள் வெற்றிகரமாக நடைபெற மக்கள் மனம் வைத்தால் மட்டுமே முடியும் என்கிறார்.

மேலும், மன்னார் வளைகுடா பகுதி காக்கப் படுவதின் மூலம் பல்லுயிர் வளம் பெருகுவதுடன், கடல் மீன்களின் வளம் பெருகி மீனவர்களின் வாழ்க்கை மேம்படும். என கூறுகிறார் இறகுகள் ரவீந்திரன்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒற்றை காலில் சாதிக்க துடிக்கும் மாணவன்

Saravana Kumar

ஒரே நாளில் 45% அதிகரித்த கொரோனா பாதிப்பு

Halley Karthik

முப்படைகளின் முதல் தலைமை தளபதியின் பணிகள் என்னென்ன?

Arivazhagan CM