தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி 2026-27-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இன்று நீதி, சிறைகள், சட்டம், எரிசக்தி, சிறப்புத் திட்டங்கள், அறநிலையத் துறை மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன.
இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எண்ணூரில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “சென்னை எண்ணூர் பகுதியில், கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
பாமக எம்.எல்.ஏ. கணேஷ் குமார்
எண்ணூரில் மீன்கள் இறந்து கிடந்த விவகாரத்தில், சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற அனைத்து நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். இந்த மீன்கள் இறப்பைத் தடுக்காமல் விட்டால் பழவேற்காடு ஏரிக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும் என்றார்.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
பல்வேறு காரணங்களால் கொசஸ்தலை ஆறு பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. எண்ணூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரக்கூடிய கழிவுகளால் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட்
மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தனியார் நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மீன்வளத் துறை இணைந்து, ஆற்றின் அருகே தொழிற்சாலை கழிவுகளை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ், ஆற்றில் மீன்கள் இறந்து கிடப்பது தெரிந்தவுடன் அதிகாரிகளை சம்பவ இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டோம். ரயில்வே பிரிட்ஜ் மற்றும் பக்கிங் கால்வாய் அருகே ஆய்வு செய்ததில், தனியார் ஆலைகளால் ரசாயனக் கலப்பு பாதிப்பு இல்லை என்பதும், மனிதக் கழிவுகளால் இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதும் தெரிய வந்தது. இந்தப் பாதிப்பு குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ள தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய கணேஷ்குமார், எந்த ஒரு குழுவும் அமைக்காமல் ரசாயனக் கலப்பு இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை அவர் பரிசீலனை செய்ய வேண்டும். ரசாயனக் கலப்பு ஏற்பட்டால் மட்டுமே தண்ணீரின் தன்மை மாறும். எனவே, குழு அமைத்து முழு விசாரணை நடத்தி, தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருந்தால், இதற்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எந்த நிறுவனமாக இருந்தாலும் முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தவறு செய்தால் கண்டிப்பாக விடமாட்டோம். கடந்த மூன்று மாதங்களாக ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். ஆறுகளில் இரசாயனக் கழிவுகள் கலக்கக்கூடிய எந்த நிறுவனமாக இருந்தாலும், எந்தத் தயவும் பார்க்காமல் நடவடிக்கை எடுப்போம் என்றார்.




