தமிழ்நாட்டில் நடத்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் மூலம் தவெக 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது. இதனிடையே புதுச்சேரியில் இருந்த அதிமுகவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று காலை 11 மணிக்குள் சென்னைக்கு திரும்ப அதிமுக கட்சி தலைமை அறிவுறுத்தியது. அதன்படி புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு முதல் ஒவ்வொருவராக சென்னைக்கு திரும்பினர்.
இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே, தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் லீமா ரோஸ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்.எல்.ஏக்களின் இந்த திடீர் ஆலோசனை அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







