பாஜக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைவதாக அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளனர்.
கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கூறியதாவது :
“இன்று மதியம் 2:15 மணிக்கு சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜகவில் இருந்து 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் சேர உள்ளனர். மேலும் இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சியும் தனித்து நின்ற சரித்திரம் இல்லை. அதிமுக மட்டும் தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 2014 ஆம் ஆண்டு தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த 40 நாடாளுமன்ற தொகுதியில் ஒரு சீட்டை பாஜக ஜெயித்துக் காண்பிக்கட்டும். இது தென் மாநிலம் இங்கெல்லாம் அவர்கள் சலசலப்பிற்கு அதிமுக அஞ்சாது. மகாராஷ்டிராவில் ஏக்நாக் ஷிண்டே போல் ஒருவரை இங்கு உருவாக்கலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதெல்லாம் இங்கு நடக்காது. அதிமுக தொண்டன் ஒருவரை கூட பாஜகவால் அசைக்க முடியாது.
ஒரு சட்டமன்ற உறுப்பினரே அதிமுகவின் உழைப்பினால் தான் வெற்றி பெற்றார். சட்டமன்றத் தேர்தலில் எனது தொகுதியை விட்டுவிட்டு அவர்கள் பக்கத்தில் தான் நின்றேன். மேலும் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை. பாஜக கோவையில் ஜெயிக்க வேண்டும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது.
இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார்.
முன்னதாக, பேசிய கல்யாண சுந்தரம் கூறியதாவது :
“கடந்த ஒரு வாரமாகவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்தும், பிற அமைச்சர்கள் குறித்தும் மாவட்ட செயலாளர் குறித்தும் அவதூறு செய்திகளை பாஜகவும் திமுகவும் இணைந்து பரப்பிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் இணையப் போகிறார்கள் என்ற ஒரு வதந்தியை தொடர்ச்சியாக பரப்பி வருகின்றனர். அதிமுக தொண்டர்களின் மன உறுதியை குறைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இது போன்ற புகைப்படங்களை பரப்பி வருகின்றனர்.
மேலும் இது போன்ற செயல் அறமற்றது. அறம் என்று ஒன்று இருந்தால் திமுகவும் பாஜகவும் இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்’
இவ்வாறு கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.








