எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க அதிமுக கடிதம் அளித்துள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்துடன், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை தான் கட்சியில் இருந்து நீக்குவதாக பேட்டியில் பதிலளித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலகத்திற்கு அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கிய தகவலை பகிர்ந்து அவரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியுள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகவும், ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவர் உள்பட வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் என 3 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதுதவிர அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் தர்மரின் ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உள்ளது.
இருந்தாலும் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே இருப்பதால் அவர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார் என்ற கேள்விகளும் முளைத்துள்ளன.