குடும்ப நலத்திட்டங்கள்; மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடி

குடும்ப நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை…

குடும்ப நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை தின விழா மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதி மொழியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று உலக அளவிலான 36-வது மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. 1987ம் ஆண்டு முதல் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக “குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை ஏற்போம், புதிய அத்தியாயம் படைப்போம்” என்று ஐ.நா. தெரிவித்துள்ளது என்றார்.

குடும்ப நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது என்றார். மேலும் நம் நாட்டில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 19.7 சதவிகிதம் என்ற விகிதத்தில் குழந்தைகள் பிறக்கின்றன. தமிழகத்தில் 14.2 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தில் தான் இரு குழந்தைகளுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்வோர் சதவிகிதம் 78 ஆக உள்ளது என்றும் மருத்துவத்துறையில் அனைத்து காரணிகளிலும் நாம் முன்னணியில் உள்ளோம் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.