தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் தேர்வு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தோல்வி, பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள புதிய வழக்கை எப்படி எதிர்கொள்வது, பாஜக -அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாளை காலை தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற பிறகு அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெய்குமார், திமுக ஆட்சி மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி உள்ளது. அதனால் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளாதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக – பாஜகவினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ படத்தை எரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல், சம்மந்தப்பட்டவர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்கிறது என கூறிய ஜெயக்குமார், ஓ.பி.எஸ் குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்து பேசினார்.
அப்போது ஓ பன்னீர்செல்வம் கட்சி நடத்தவில்லை, கடை நடத்தி வருகிறார். அங்குள்ள 99 சதவிகிதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது குறித்து கட்சி தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா