தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமை மற்றும் டெல்லி தான் முடிவு செய்யும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாய் வசதி, கான்கிரீட் தளம் அமைத்தல், குடிநீர் வசதி, சிறுபாலம் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியிலை வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று கூறியது பற்றி கேட்டதற்கு, அது அவரது கருத்து என்று பதிலளித்தார்.
இதையும் படியுங்கள் : ட்விட்டரில் ‘கோல்டன் டிக்’ அங்கீகாரம் பெற்றது நியூஸ்7 தமிழ்…!
அதிமுக தனது கூட்டணி குறித்து தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணி பற்றி அதிமுக தலைமை மற்றும் டெல்லியும் தான் முடிவு செய்யும் என்று கூறினார். அதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு வெளியானால் பாஜகவுடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது என்றார்.







