அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர கே.சி.பழனிசாமியின் மகன்
சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி
நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார்
ஆதித்தன், கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் ஆகியோர் உரிமையியல் வழக்கு
தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கட்சியின்
உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய
உரிமையில்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என
கோரிக்கை வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், உட்கட்சி தேர்தலுக்கு
எதிராக ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவருக்கும்
அனுமதியளித்து ஏப்ரல் 26ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இருவருக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய
அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி, சுரேன் பழனிச்சாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் கட்சியின் உறுப்பினர்களே இல்லை என்றும், ராம்குமார் ஆதித்தனின் உறுப்பினர் அட்டை கடந்த ஜூலை 2019ம் ஆண்டே காலாவதியாகிவிட்டதால் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து தனி நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால
தடைவிதித்து உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 10ம்
தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-ம.பவித்ரா








