தவறு செய்தவர்கள் திருந்தி வரும்போது ஏற்றுக்கொள்வது தான் சிறந்த தலைமைக்கான அழகு என இயேசுபிரானின் கதையை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள முதியோர் இல்லத்தில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது எனவும், கிறிஸ்துவ பெருமக்களுக்கு அதிமுக என்றென்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் காலத்தில்தான் கிறிஸ்துவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், ஜெயலலிதா காலத்தில் ஜெருசேலம் பயணத்திற்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், தவறு செய்தவர்கள் திருந்தி வரும்போது அவர்களை ஏற்றுக்கொள்வதுதான் சிறந்தது என நாளிதழ் ஒன்றில் வந்த இயேசுபிரான் கதையை சுட்டிக்காட்டி அவர் பேசினார்.








