எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி, உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டது, கட்சி கொள்கைக்கு விரோதமானது என்றும், இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது எனவும் வாதாடினார்.
இதனையும் படியுங்கள்: பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டனர் – எரிக் எஸ்.சோல்ஹிம் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
எனவே தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும் எனவும். விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்காமல் கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதம் எனவும் முறையிட்டார். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும், உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் வாதாடினார். உச்சநீதிமன்ற தீர்ப்பால் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இயலாத நிலை உள்ளதாக மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனால் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் தரப்பில் முறையிடப்பட்டது.
எதிர்மனுதாரர்களின் விளக்கத்தை கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 9 மாதங்களாக ஒரே வாதங்கள் தான் ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்தரப்பு விளக்கம் கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார்.
பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் இபிஎஸ் மற்றும் அதிமுக தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
– யாழன்







