தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகி வருகிறது. இந்த கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,தமாக.ஐ.ஜே.கே, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று உள்ளன. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வது தொடர்பாக அதிமுக தலைமையும், பாஜக தலைமையும் தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இதனிடையே நேற்று தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சை அதிமுக அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இதன்படி, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கவும், கூட்டணி கட்சிளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கலந்து பேசி முடிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







