இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் கடந்த மார்ச் 27ம் தேதி படுகொலை செய்யப்பட்ட அதிமுகவின் பெரம்பூர் பகுதி (தெற்கு) செயலாளர் இளங்கோவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்ததோடு அவரது திருவுருவப்படத்தையும் மலர் தூவி திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கஞ்சா விற்பனையை பெரம்பூர் பகுதியில் தடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு காவல்துறைக்கு அதிமுக நிர்வாகி இளங்கோவன் தகவல் தெரிவித்தார். ஆனால் மனதை பதற வைக்கும் வகையில் மிக கொடூரமான அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சட்டரீதியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்றார்.
மறைந்த இளங்கோவன் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினருக்கு அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும். மேலும் போதைப்பொருள் அதிகமாக விற்பனையாவதால் இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இன்றைய நிலையில் சட்ட ஒழுங்கு படிப்படியாக சீர்குலைந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. அரசு இதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் மதுரை மாநாடு நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிச்சயம் ஒரு திருப்பு முனையாக அமையும். இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் மதுரையை நோக்கிப் பார்க்கும் அளவிற்கு பிரமாண்ட மாநாடாக இருக்கும் என தெரிவித்தார்.
அத்துடன் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருவதால் அடுத்த மூன்று மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. கர்நாடக தேர்தலுக்கு முன்பு சின்னம் கிடைக்கப்பெற்றால், அதிமுக போட்டிவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







