தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் கூட இல்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனிடையே பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : குந்தவை, வந்தியத்தேவன் காதலை பற்றி எனக்கே தெரியாது! – ஆதித்த கரிகாலன்
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில், நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா, இயக்குநர் மணிரத்னம் ஆகிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகை த்ரிஷா, “எல்லாருக்கும் மிகப்பெரிய நன்றி. கார்த்தி சொன்ன மாதிரி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இந்த படம் செல்ல நீங்கள் தான் காரணம். பல ஆண்டுகளாக குந்தவை என்றால் ஒரு முகம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது குந்தவை என்று சொன்னால் அதற்கு ஒரு முகம் இருக்கிறது. அதற்காக இயக்குநர் மணிரத்னத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் கூட எனக்கு இல்லை” என்று தெரிவித்தார்.








