அதிமுக – பாஜக இடையே மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி இருந்த நிலையில் தற்போது கூட்டணியில் பாஜக இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இதுவரை அதிமுக-பாஜக இடையேயான கூட்டணிகள் குறித்து விரிவாக காண்போம்.
அதிமுக – பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் பிள்ளையார் சுழி போட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். அவர் தான் முதன் முறையாக, அதிமுக கூட்டணியில் போட்டியிட பாஜகவுக்கு 1998-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு அளித்தார். அப்போது அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டது. இதில் மாஸ்டர் மதன் (நீலகிரி), சி.பி.ராதாகிருஷ்ணன் (கோவை) மற்றும் ரெங்கராஜன் குமாரமங்கலம் (திருச்சி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக – பாஜக உறவில் வாஜ்பாய் காலத்திலி்ருந்தே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கடைசி காலக்கட்டத்தில் “பாஜகவுடன் கூட்டணி வைத்து தவறு செய்து விட்டேன். இனியும் அந்த தவறை செய்யமாட்டேன்” என வெளிப்படையாக அறிவித்து தேர்தலை எதிர்கொண்டார். ஒருகட்டத்தில் “மோடியா… லேடியா..” என ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை பாஜகவிற்கு எதிராகவே கையாண்டார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதனைத் தொடர்ந்து முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுடன் கூட்டணியிலேயே இருந்தனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவினரிடையே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறிக்க வலியுறுத்தி பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்து கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில், ”பாஜக மேலிடம் கூறித்தான் அண்ணாமலை அதிமுகவை விமர்சித்து வருகிறார். அண்ணாமலையின் விமர்சனத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்றவே முடியாது. தேர்தலில் பாஜக தனியாக நின்றால் நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெறுவர் “ என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதுவரை அதிமுக பாஜக இடையிலான கூட்டணி குறித்து காண்போம்…
1998 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக முதன்முறையாக இடம் பெற்றது. இதில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அந்த கட்சி 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தது. அவற்றில் 3 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
1999-ம் ஆண்டு பாஜக கூட்டணி அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றார் ஜெயலலிதா. இதன் மூலம் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணியின் 13 மாதங்கள் ஆட்சி கவிழ்ந்தது.
2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி உருவானது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால், அவை அனைத்திலும் பாஜக தோல்வி அடைந்தது.
தொடர்ந்து 2011-ம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து 10 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது.
2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக – தேமுதிக கூட்டணி இணைந்தது புதிய அணியை உருவாக்கி தமிழ்நாட்டில் தேர்தலை சந்தித்தன. இவற்றில் 7 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானார்.
2016 – சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 188 தொகுதிகளில் தனித்துப்போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது.
ஜெயலலிதா மறைவிற்கு பின் 2019 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மீண்டும் பாஜக இணைந்தது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவை அனைத்திலும் பாஜக தோல்வியை தழுவியது.
இந்த கூட்டணி தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரந்தது. அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது.
2021ல் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்தது.
2022ல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டது. அந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது.
இந்த நிலையில், மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருப்பது, தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நமது செய்தியாளர் ஷெர்லி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் நடத்திய கலந்துரையாரலை காண…