நாமக்கல்லில் ஐவின்ஸ் என்ற உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உணவகங்களில் ஷவர்மா , கிரில் சிக்கனுக்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தித்வேலூர் சாலையில் ஐவின்ஸ் என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் இரவு உணவு சாப்பிட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் ஷவர்மா, பிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு இன்று அதிகாலை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 6 மாணவிகள், 8 மாணவர்கள் என 14 பேர் மொத்தமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நாமக்கல்- சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த கலையரசி (14) என்ற சிறுமி குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற உணவகத்தில் சாப்பிட்டுள்ளார்.
இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமியின் தம்பி பூபதி (12), தாய் சுஜாதா, உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, உணவக உரிமையாளர் நவீன் குமாரை நாமக்கல் போலீசார் அழைத்து விசாரணை செய்யப்பட்டது.உணவகத்தில் கடந்த சனிக்கிழமை சாப்பிட்டவர்களின் விவரங்கள், மருத்துவமனையில் வேறு யாராவது அனுமதிக்கப்பட்டுள்ளார்களா என மாவட்ட ஆட்சியர் உமா சுகாதாரத்துறையினருக்கு விபரங்களை சேகரிக்க உத்தரவிட்டார். மேலும், பிரச்னைக்கூறிய உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த உணவகத்தில் 43 பேர் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 38 பேர் பெரியவர்களும், 5 பேர் குழந்தைகளும், ஒரு கர்ப்பிணியும் என விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உணவகத்தில் சனிக்கிழமை மட்டும் சுமார் 200 பேர் சாப்பிட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா கூறியதாவது, “தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட்டோம். அனைவரும் நலமுடன் உள்ளனர். இருப்பினும் அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து உணவக உரிமையாளர் நவீன்குமார் (25), மாஸ்டர்கள் சஞ்சய் மககுத் (27), தபாஸ் குமார்(30) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் தற்காலிகமாக ஷவர்மா, கீரில் சிக்கன் தயார் செய்ய தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.