2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பாரம்பரிய நெல் ரகமான குழியடிச்சான் நெல் ரகத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் முதல் முழுமையான வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம், 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, வேளாண்மைக்கும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கின்றார். விளைபொருட்களுக்கான ஆதார விலை, நெல் கொள்முதல் நிலையங்கள் மேம்பாடு, புதிய உழவர் சந்தைகள், இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம், பாரம்பரிய ரகங்கள் சாகுபடிக்கு ஆகியவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் திருவிழா, விவசாய சங்கங்கள் மறுகட்டமைப்பு, இயற்கை உரங்கள் உற்பத்தி, சந்தைகளில் நச்சுத்தன்மை இல்லாத காய்கறிகள் விற்பதற்கான நடவடிக்கை, விவசாயிகளுக்கு காலநிலை குறித்து நேரடி தகவல்கள் அளிக்க நடவடிக்கை. மேலும்,
சிறப்பாக சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு விருதுகள், உள்நாட்டு கால்நடை இனங்களுக்கான முக்கியத்துவம், கால்நடை ஆராய்ச்சி மையங்கள், பள்ளி மாணவர்களிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டங்கள், வேளாண் பட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் வேளாண்மை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பாரம்பரிய நெல் ரகமான குழியடிச்சான் நெல் ரகத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, அம்பேத்குமார் ஆகியோர் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.








