கோவை அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கோவை அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தபடுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் மற்றம் அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் ஆர்பாட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் இந்த தொழிற்பேட்டை அமைச்ச விவசாய நிலங்கள் கையகப்படுத்தபடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழில் மற்றம் கல்வி துறைகளில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தமிழ்நாடு அரசு ஒரு தொழிற்பூங்காவை நிறுவ முடிவு செய்தது.
விவசாய மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப் படும் என்றும், எந்தவித கட்டாயமும் இன்றி, தாமாக முன்வந்து விவசாயிகள் தங்கள் நிலங்களை கொடுத்தால் தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தொழிற்பூங்காவில், அமையவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுப்படுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும். எனவே, டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தற்போது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.








