ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ’அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இந்த படத்தில் சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா, ஸ்டீபன் லாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2009 இல் வெளியான அவதார் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் இரண்டாம் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியுள்ள அவதார் 2ஆம் பாகம் கற்பனைகள் நிறைந்த பாண்டாரோ உலகிற்கு நம்மை கொண்டு செல்கிறது.
முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் நிச்சயம் யோசிக்க வேண்டும். சுவாரசியமில்லாத முதல் பாதியும் சுமாரான பின்னணி இசையும் நம்மை சோர்வடைய செய்கிறது. குறிப்பாக 3 மணி நேரம் 12 நிமிடங்கள் படத்தின் நீளம் என்பது மிகப்பெரிய நெகடிவ்வாக அமைந்துள்ளது.
காட்சிக்கு, காட்சி பிரம்மிப்பையும், திகைப்பையும் ஏற்படுத்தினாலும் திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் போனதே கலவையான விமர்சனங்களை பெற காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக அதிக எதிர்பார்ப்பில் திரையரங்கு வந்த ரசிகர்களுக்கு அவதார் 2 மிகப்பெரிய ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
ஒரு திரைப்படம் வெற்றி பெறுகிறது அல்லது தோல்வியடைகிறது என்பதை தீர்மானிப்பது ரசிகர்கள் மட்டுமே. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ரசிகர்கள் நினைத்து விட்டால் 2022 இல் வெளியான படங்களில் அவதார் 2 நிச்சயம் பல சாதனைகளை படைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.









