”கல்விக்கு வயது தடையில்லை..” என்பதற்கு உதாரணமாக 51 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி கரூர் பெண் அசத்தியுள்ளார்.
”சீனா தேசம் சென்றேனும் சீர் கல்வி கற்றுக் கொள்” என ஒரு அரேபிய பழமொழி உண்டு. அன்றைய கரமுரடான பாலைவன பூமியான அரேபியாவுக்கும் சீனாவுக்கும் பெரும் தொலைவு தூரம் இருந்தது. இந்த நிலையில்தான் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சீனா சென்றாவது கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் என வலியுறுத்தி உள்ளனர்.
கற்ற கல்வி தான் ஒரு மனிதனை உயர்த்தும். காலம் கடந்தும் நமக்கு கை கொடுக்கும். அதனால்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கல்வியை வலியுறுத்தி திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார். கல்வியின் தேவை கருதி அரசும் சட்டங்களும் அனைவருக்கும் கல்வி மற்றும் இட ஒதுக்கீடு, அடிப்படை கல்வி விகிதத்தை அதிகரித்தல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக 51 வயது பெண் ஒருவர் பல ஆண்டுகளுக்கு பின் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி அசத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகிலா பானு (51). இவரது கணவர் பெயர் சேட் (55). இவர் 1989ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். இதனைத் தொடர்ந்து திருமணம் மற்றும் வேலை என ஆண்டுகள் கடந்து விட்டது.
கடந்த 12 ஆண்டுகளாக சத்துணவு மையத்தில் சமையல்காரராக ராகிலா பானு பணிபுரிந்து வந்தார். சத்துணவு அமைப்பாளர் பொறுப்பிற்கு வர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் ராகிலா பானு ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஐந்து பாடங்களுக்கு தேர்வு எழுதி இருந்தார். இதில் இரண்டு பாடங்களில்
தேர்ச்சி பெற்றிருந்தார். இந்த நிலையில் தற்பொழுது நடைபெற்று வரும்
துணைத்தேர்வில் மீதம் உள்ள மூன்று பாடங்களுக்கு தேர்வு எழுதி உள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தனது மகன் சாகுல் ஹமீது (24) பல்வேறு முயற்சிகளை எடுத்து தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததாகவும், தேர்வு நுழைவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்தையும் தனது மகனே விண்ணப்பித்து கொடுத்ததாகவும் ராகிலா பானு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.







