சாத்தான்குளம் அருகே தந்தையின் கல்லறையை உடைத்த மகன் மீது நடவடிக்கை கோரி டி.எஸ்.பி அலுவலகத்தில் தாய் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குலசேகரன் குடியிருப்பை
சேர்ந்தவர் சௌந்தர ராணி. இவருடைய கணவர் ரத்தினசாமி. இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து சௌந்தர ராணி கணவர் இறந்த பிறகு பண்ணை வீட்டில் இளைய மகனுடன் வசித்து வருகிறார்.
இவரது மூத்த மகனான சுடலை ராஜ் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பண்ணை வீட்டு அருகிலேயே சுடலை ராஜ் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். பண்ணை வீட்டிற்கு பின்புறம் தந்தை ரத்தினசாமி கல்லறை உள்ளது. அதை கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரவில் சுடலை ராஜ் தரைமட்டமாக உடைத்துள்ளார்.
இதையறிந்த, தாய் சௌந்தர ராணி சுடலை ராஜ்-யிடம் கேட்டுள்ளார். அதற்கு அவா், தந்தை கல்லறை இருப்பதினால் என்னுடைய மனைவி குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தான் கல்லறையை உடைத்தேன் என்று கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த தாய் சௌந்தர ராணி கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாத்தான்குளம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சாத்தான்குளம் காவல்துறை அதிகாரி சுடலை ராஜ்-யிடம் கல்லறையை 15 நாட்களுக்குள் அதே இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறி அனுப்பி உள்ளனர்.
ஆனால் 15 நாட்கள் கழித்தும் கல்லறை கட்டிக் கொடுக்காததால் அவருடைய தாயார் சௌந்தர ராணி சாத்தான்குளம் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு தன்னுடைய கணவரின் கல்லறையை அதை இடத்தில் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க புகார் அளிக்க சென்றுள்ளாா். ஆனால் டி.எஸ்.பி அங்கு இல்லாததால் அங்குள்ள அதிகாரியிடம் புகார் மனுவை அளித்து அங்கிருந்து சென்றார்.
ரூபி.காமராஜ்







