ஈரோட்டில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரை இன்று மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. இதற்காக, சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தடைந்தார். இதனையொட்டி அங்கு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்தை சுற்றிலும் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து கூட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில், “பெரியார் பிறந்த மண்ணிற்கு தவெக தலைவர் விஜய் வந்துள்ளார். இந்த கூட்டம் நாளை விஜய் முதல்வராவதற்காக கூடிய கூட்டமாக தெரிகிறது. தமிழக மக்கள் நாளை ஆள வேண்டும் என நினைப்பது புரட்சி தளபதியை தான்.
எங்கள் தலைவர் மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறார். 500 கோடி வருமானத்தை உதறிவிட்டு வந்திருக்கிறார். புரட்சித்தலைவருக்கு பிறகு புரட்சி தளபதி தான். 234 தொகுதிகளில் அவர் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள். உங்களை பொறுத்தவரையிலும் எதிர்காலம் பிரகாசம் உள்ள எதிர்காலமாக மாறப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.







