ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டது – திருமாவளவன் குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதாக விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் விமர்சித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதாக விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பொங்கல் வைத்து கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது..

”தை திருநாளே தமிழர்களுக்கான புத்தாண்டு நாள், கருணாநிதி முதலமைச்சராக இருந்த
போது தை திருநாளை புத்தாண்டு நாளாக சட்டம் கொண்டு வந்தார். பின்னர் ஜெயலலிதா
அதை ரத்து செய்து சித்திரை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்ததாக கூறினார்.
தற்போதுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தாய் என்றாலும் அம்மா என்றாலும் ஒன்று தான் அம்மா என்பதை அதிகாரபூர்வமாக
அழைக்கிறோம். தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்று தான்
இதில் வேறுபாட்டை கொண்டு வருவது குதற்கவாதம். இரண்டுக்கும் இடையில் வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் தொடங்கி வைத்துருப்பது சொல் விளையாட்டல்ல கருத்தியல் முரண்.

ஆளுநரின் போக்கு தமிழ் இனத்திற்கு விரோதமானது. திராவிட கருத்தியலுக்கு எதிரானது
சமூக நீதி அரசியலுக்கு எதிரானது. ஆர் என் ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்த போதே அவரை நியமிக்க வேண்டாம் அரசியல் குழப்பத்தை, பதற்றத்தை ஏற்படுத்துவார் என எச்சரித்தேன் அதை அவர் தற்போது உண்மையாக்கி கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த பிற்போக்கு மற்றும் மதவாத சக்திகளிடம் இருந்து
காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது வேங்கைவயல் சம்பவம், மனித உணர்வுள்ள அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டிய அநாகரீகம். உலக அரங்கில் இது ஒரு வெட்க கேடு இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாதது ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

முதலில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு பட்டியலின மக்களையே அச்சுறுத்தியதாகவும் அப்பகுதியை சேர்ந்த விசிக பிரமுகரை நீ தான் இந்த குற்றத்தை செய்தாய் என ஒப்புக்கொள்ள மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினார். இதை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு விசிக கொண்டு சென்ற பின்னர் தற்போது அந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்த அநாகரீகத்தை செய்தவர்களை கடுமையாக தண்டுக்க வேண்டும். அதன் மூலம்
இந்தியாவிற்கே அது வழிகாட்டுதலாக அமைய வேண்டும். தமிழர்களின் அவமான சின்னமாக இருக்கும் அந்த குடிநீர் தொட்டியை உடனடியாக இடிக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவான குடிநீர் தொட்டியில் இருந்து பட்டின மக்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

கனியாமூர் மாணவி மரணம் மற்றும் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த
விவகாரமும் தமிழ்நாடு அரசுக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படாத வகையில் அமைய
வேண்டும். இரு விவகாரத்திலும் முதலமைச்சர் தலையிட்டு விசாரணையின் உண்மை நிலையை அவ்வப்போது அறிந்து கொள்வது நல்லது.

பொங்கல் திருநாளான இன்று எஸ் பி ஐ வங்கி எழுத்தர் தேர்வை வைத்துள்ளார்கள்.
இந்த தேர்வை எழுதும்13 ஆயிரம் குடும்பங்களை சார்ந்தவர்கள் தேர்வுக்கான
பதற்றத்தில் இருக்க வேண்டும் எனும் நிலையை ஏற்படுத்தியுள்ளது அதிர்ச்சியாக
உள்ளது. தேர்வை மாற்றுத் தேதியில் நடத்த நான்  உட்பட பலரும்  உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புக்கொள்ளவில்லை.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியபோதும் அதை அவர் பொருட்டாக எடுத்துக்
கொள்ளவில்லை.  அவர் தமிழர்களையும் தமிழையும் பொருட்டாக
மதிப்பதில்லை இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ்நாட்டு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கட்டாயம் தமிழில் தேர்ச்சி பெற
வேண்டும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிற்கு வேலைவாய்ப்பு தேடி வரும் வட இந்தியர்கள் இருக்கு வாக்குரிமை அளிப்பது தமிழ்நாட்டின் அரசிலையே புரட்டிப்போடும். இதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பு தேடி வருகிறார்களா அல்லது வாக்கு வங்கியை உருவக்க வருகிறார்களா என கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரும் வட இந்தியர்களுக்கு இங்கு வாக்குரிமை இல்லை என்கின்ற முடிவை எடுத்து மத்திய அரசு ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்ப வேண்டும்.

ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் அரசு ராஜினாமா செய்ய வேண்டும்
என குருமூர்த்தி பேசியுள்ளார். அது குரு மூர்த்தியின் விருப்பமாக இருக்கலாம். அவர் சட்டப்படி ஆய்ந்து பேசுகிறார் என சொல்ல முடியாது, இந்த அரசு ஆட்சி நீடிக்க கூடாது என்கிற காழ்ப்பிலிருந்து அந்த கருத்தை உமிழ்ந்திருக்கிறார்.  அதை பொருட்படுத்த தேவையில்லை.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஒப்புதல் அளித்துள்ளது. ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டது ஆகவே பாஜக எந்த முடிவை எடுத்தாலும் அதிமுக கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும். பாஜகவே வேறு அதிமுக வேறு என கருத வேண்டாம், அவர்கள் இருவரும் ஒரே அமைப்பாக
தான் இயங்குகின்றனர். “ என்று திருமாவளவன் தெரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.