முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவையைத் தொடர்ந்து குமரி, சேலத்திலும் பெட்ரோல் குண்டு வீச்சு – தொடரும் பதற்றம்

கோவை, ஈரோடு மாவட்டங்களைத் தொடர்ந்து திருப்பூர், கன்னியாகுமரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் சாலை கொங்கு வேளாளர் பள்ளி பின்புறம் உள்ள பாஜக கோட்ட பொறுப்பாளர் பாலு என்பவரின் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருப்பூர் அங்கேரிபாளையம் அடுத்த ஏவிபி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அமைப்பு பொறுப்பாளர் புதுக்கோட்டை பாலு என்பவர் குடியிருந்துள்ளார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்த நிலையில், நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பாஜக அமைப்பு பொறுப்பாளர் தங்கியிருந்த வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டை பற்ற வைக்காமல் வீசியதால் பெரும் அசம்பாவிதம் நிகழவில்லை.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் லட்சுமணன் அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமானது லட்சுமணன் மீது தொழில் போட்டியில் வீசப்பட்டதா? அல்லது பாஜக அமைப்பு பொறுப்பாளர் வீடு மாறியது தெரியாமல் அவரைக் குறிவைத்து செய்யப்பட்ட தாக்குதல் சம்பவமா என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட இடத்தில் பேட்டரிகளும் கிடந்ததால் பேட்டரி குண்டு ஏதேனும் வீசப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருமன்கூடல் பகுதியில் உள்ள பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர். ஜன்னலில் விழுந்த பெட்ரோல் குண்டு பெரிய அளவில் தீப்பற்றி எரியாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கல்யான சுந்தரத்திற்குச் சொந்தமான 2 சொகுசு கார்களும் தப்பியது. தகவலறிந்து சம்பவ இடத்திகு வந்த மண்டைக்காடு போலீசார் தடையங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் இருசக்கர வாகத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில், ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ளனர். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் ராஜன். இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனிடையே இந்த சம்பவத்தைக் கண்ட எதிர்வீட்டில் வசிக்கும் தியாகராஜன் என்பவர் ராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளான முகமது ஆரிஃப் மற்றும் முகமது இஸ்மாயில் ஆகிய இருவரிடம் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் மாநகர துணை ஆணையாளர் மாடசாமி விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் கடந்து மூன்று நாட்களுக்கு முன்னர் என்ஐஏ அதிகாரிகள், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் 12 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகளில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் எதிரொலியாக முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை தொடர்ந்து திருப்பூர், கன்னியாகுமரி, சேலம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

  • ஜெனி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜெயலலிதா பாணியில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Halley Karthik

ஓடும் பள்ளிப் பேருந்தில் புகை: துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்

Web Editor

நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்; முதலமைச்சர் அறிவிப்பு

G SaravanaKumar