35 ஆண்டுகள் கழித்து கமல், மணிரத்னம் இணைந்து உருவாக உள்ள ‘KH234′ படத்தில் நடிகர் சிம்பு வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. பின்னர் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்த படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசன் அடுத்ததாக தனது 233 ஆவது படத்தில் எச்.வினோத்துடன் இணையவுள்ளதாகவும், எச்.வினோத் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் ‘கேஎச்234’ படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்து விட்டதாகவும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து இப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய தகவலின்படி மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234 வது படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் சிம்புவுக்கு 50வது படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்பு இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு இதற்குமுன் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






