சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை ஐதராபாத் உள்ளிட்ட
நகரங்களுக்கு நாளை முதல் விமான போக்குவரத்து மீண்டும் துவங்க உள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து
சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது.
இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது. விமான
சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார். இந்த நிலையில், நாளை முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து இரண்டாவது விமான சேவை தொடங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 16-ம் தேதி முதல் உதான்-5 திட்டத்தின் கீழ் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர் – சேலம் -கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இரண்டாவது விமானமாக இண்டிகோ விமான நிறுவனம் சேலத்தில் இருந்து நாளை முதல் பெங்களூர் – சேலம் – ஐதராபாத் ஆகிய வழித்தடங்களிலும், சென்னைக்கும் விமான போக்குவரத்தை துவங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், சேலம் விமான நிலைய அதிகாரிகள் செய்து தயார் நிலையில்
வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை செல்லும் அனைத்து இருக்கைகளையும் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விமான நிலைய இயக்குனர் ரமேஷ் கூறும் போது இன்டிகோ நிறுவனம் சார்பில் நாளை முதல் பெங்களூர் – சேலம் – ஹைதராபாத் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. மீண்டும் ஹைதராபாத் – சேலம் -பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என்று கூறினார்.







