ஈரோட்டில் கூலி தொழிலாளர்களிடம் இருந்து வாரம் மற்றும் மாத சீட்டுகள் மூலம்
சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்த பெண் திடீரென குடும்பத்தினருடன்
தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையத்தை அடுத்த ராமமூர்த்தி நகரில் வசித்து வந்தவர் கலா.
இவரது கணவர் செல்வராஜ், ஈரோடு மார்கெட்டில் பழக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கலா நடத்தி வந்த வாரச்சீட்டு, ஆடிமாத சீட்டு மற்றும் பங்குனி மாத சீட்டுகளில், கக்கன்நகர், கிருஷ்ணம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், முதலில் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சீட்டு தொகை 500 முதல் 1000 ரூபார் வரை மாற்றப்பட்டுள்ளதாக கலா
தெரிவித்ததை அடுத்து, உயர்த்தப்பட்ட சீட்டு பணத்தையும் முறையாக செலுத்தி
வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சீட்டு தவணைகள் முடிந்து ஒரு
மாதமாகியும் பணத்தை திருப்பி கொடுக்காமல் கலா காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதையும் படியுங்கள்:2 ஆண்டுகளுக்குப் பின் சேலத்தில் இருந்து நாளை முதல் மீண்டும் விமான சேவை!
இதுகுறித்து கேட்டபோது வங்கியில் பணம் எடுப்பதில் சிக்கல் நிலவுவதாகவும்,
ஓரிரு நாட்களில் பணத்தை கொடுத்துவிடுவதாகவும் கலா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த 5 நாட்களாக கலாவின் வீடு பூட்டி இருப்பதை கண்டு
சந்தேகமடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் விசாரித்த போது, கலா சீட்டு பணத்தை
ஏமாற்றி விட்டு குடும்பத்தினருடன் தலைமறைவாகியிருப்பது தெரிய வந்ததுள்ளது.
இந்த தகவலை கேட்டு சீட்டு பணம் செலுத்திய மக்கள் ,கலாவின் வீட்டை முற்றுகையிட்டு
போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கட்டிட தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர்கள்
என பல்வேறு கூலி தொழிலாளர்களிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை பெற்று
தலைமறைவான கலா மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்து, தங்களது பணத்தை
மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.







