நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் எதிரொலியாக கேரளா, கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மாநில எல்லைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நீலகிரி வனக்கோட்டம்
பகுதியில் கடந்த சில மாதங்களாக பன்றிகள் உயிரிழந்து வந்தது. அதேபோல் கர்நாடக
மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பன்றிகள் மர்மமான முறையில்
உயிரிழந்தது குறித்து இருமாநில கால்நடை மருத்துவ குழுவினர் இறந்த பன்றிகளை
பிரேத பரிசோதனை செய்து இறந்த பன்றிகளின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்பின்னர் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள்
காப்பகம் பகுதியில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால்தான் பன்றிகள் உயிரிழந்தது
தெரியவந்தது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு குழுவினர் ஐந்து குழுக்களாக பிரித்து விடப்பட்டு கூடலூர், மசினகுடி, தாளூர், எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு பன்றி கூடங்களில்
ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் வளர்ப்பு பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிக்கவில்லை என உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கக்கநல்லா, தாளூர், சேரங்கோடு, நாடுகாணி உட்பட எட்டு சோதனைச்சாவடிகளில் முழுமையாக கால்நடை மருத்துவக் குழு மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே நீலகிரி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.
மேலும் வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக பன்றிகளை நீலகிரிக்கு கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக கால்நடை மண்டல இயக்குநர் பகவத்சிங், கூடலூர் கோட்டாட்சியர் முகமது ஆகியோர் தலைமையில் மசினகுடி, கூடலூர்,தொரப்பள்ளி போன்ற பகுதிகளில் உள்ள வளர்ப்பு பன்றிக்கூடங்களில் ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
வளர்ப்பு பன்றி கூடங்களில் உள்ள பன்றிகளை விற்க கூடாது என அதிகாரிகள்
உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் வனவிலங்குகளுக்கும் , கால்நடைகளுக்கும்,மனிதர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது
என கால்நடை மண்டல இயக்குநர் பகவத்சிங் தெரிவித்துள்ளார்.