ஆப்கன் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு!

ஆப்கன் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆப்கன் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப்…

ஆப்கன் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஆப்கன் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானது. இதில் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. முதற்கட்ட தகவலின்படி நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளன.

ஹெராட்டில் உள்ள 20 கிராமங்களில் 1,983 குடியிருப்புகளும் சேதம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கட்டட இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை ஹெராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

இதனிடையே உலக சுகாதார அமைப்பு எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் மருந்துகள் ஹெராட் மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது. ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்களில்  இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.