பல்லடம் அருகே தமிழகத்திலேயே முதல் முறையாக அரசு பள்ளியில் இருந்து மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிக்கு 8 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பூமலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு விளையாட மைதான வசதி இல்லாத நிலையில் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் இருந்து வந்தனர். அப்பள்ளியில்
பணி புரியும் ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர்களுக்கு உள் அரங்க விளையாட்டு
போட்டிகளில் ஆர்வம் ஏற்பட்டது.
உள்அரங்க விளையாட்டுகளுக்கும் உரிய வசதியில்லாததால் பள்ளியின் அறிவியல்
ஆய்வகத்தில் இருந்த மேஜைகளை வைத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியர் செல்வக்குமாரின் தொடர் முயற்சியால் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில் 2023-24 கல்வி ஆண்டுக்கான மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ்
போட்டியில் பூமலூர் அரசு பள்ளி மாணவர்கள் ஏழு பிரிவுகளில் கலந்துகொண்டு அதில்
வெற்றி பெற்று 6 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை
படைத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மாநில அளவில் நடைபெற உள்ள டேபிள் டென்னிஸ் போட்டிக்கு ஒரே பள்ளியில் இருந்து 8 பேர் தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் செல்வகுமாரிடம் கேட்டபோது, மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர புதிய மைதானம் அமைத்து கொடுத்தால் மேலும் பல சாதனையாளர்களை எங்கள் பள்ளியில் இருந்து உருவாக்கி காட்ட தயாராக உள்ளோம் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ம. ஸ்ரீ மரகதம்







