நவீன சாதனங்களை போல் நவீன காலத்திற்கு ஆதினங்கள் மாற வேண்டும் ; தொடரும் சர்ச்சை

தருமபுர ஆதினத்தின் பட்டினப் பிரவேச எதிர்ப்பது என்பது இந்து மதத்திற்கு எதிரான செயல் என்ற தோற்றம் உருவாகி வரும் நிலையில், பழநெடுமாறன் போன்றவர்கள் காலத்திற்கு ஏற்ப ஆதினங்கள் தங்களது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக்…

தருமபுர ஆதினத்தின் பட்டினப் பிரவேச எதிர்ப்பது என்பது இந்து மதத்திற்கு எதிரான செயல் என்ற தோற்றம் உருவாகி வரும் நிலையில், பழநெடுமாறன் போன்றவர்கள் காலத்திற்கு ஏற்ப ஆதினங்கள் தங்களது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மனிதனை மனிதன் தூக்கும் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். திருஞான சம்பந்தர் பல்லக்கில் ஏறும்போது அப்பர் எங்கே எனக் கேட்டார். உடனே பல்லக்கை தூக்கிக்கொண்டு இருந்த அப்பர், இதோ இங்கே இருக்கிறேன் என்றார். உடனே பல்லக்கை விட்டு இறங்கிய திருஞான சம்பந்தர், நீங்கள் என் பல்லக்கை தூக்கலமா ? இனிமேல் நான் நடந்தே செல்வேன் என செல்வப்பெருந்தகை பேசிக்கொண்டிருந்தபோது, அதிமுக உறுப்பினர்கள், அமைச்சர் போல் செல்வப்பெருந்தகை பேசுவது ஏற்படையதல்ல என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக, பாஜக மற்றும் பாமக உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் பக்தர்கள் மனம்கோணமல் அரசு நடந்து கொள்ள வேண்டும் என பேரவையில் பேசினர்.

இந்த சூழ்நிலையில், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் மடாதிபதிகள் நவீன சாதனங்களை பயன்படுத்துவது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்திற்கு உலகம் முழுவதிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்ட இந்த காலகட்டத்தில், இது எங்களது பாரம்பரியமான பழக்கம், அதை ஒருபோதும் கைவிட முடியாது என மடாதிபதி ஒருவர் அறிக்கை வெளியிட்டிருப்பது காலத்திற்கு ஒவ்வாததாகும்.

பல்லக்கில் பவனி வருவது பாரம்பரிய பழக்கமாகும். அதை ஒருபோதும் கைவிட மாட்டோம் எனக் கூறும் மடாதிபதிகள் தங்களின் மடத்து அறையில் குளிர்சாதனம் பொருத்தியிருப்பது ஏன்? குளிர்சாதனம் பொருத்தப்பட்ட விலையுயர்ந்த கார்களில் பவனி வருவது ஏன்? தொலைப்பேசி, கைப்பேசி மற்றும் கணினி, வானொலி, தொலைக்காட்சி போன்ற மிக நவீன சாதனங்களை மடங்களில் வைத்திருப்பது ஏன்? பக்தர்களுக்கு அருளுரை ஆற்றும்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது ஏன்? இவற்றையெல்லாம் பயன்படுத்தும் போது மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்?

மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் தாங்கள் வாழும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை கைவிட்டு உலகத்தோடு ஒட்டிச் செல்லவேண்டும். இல்லையேல் மக்களால் புறக்கணித்து ஒதுக்கப்படுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பூவுலகு அமைப்பை சார்ந்த சுந்தர்ராஜன், 70களில் கைரிக்‌ஷாவை ஓழித்த தமிழகத்தில், ஆதீனங்கள் தங்களை பிறர் பல்லக்கில் சுமக்க வேண்டும் என்று நினைப்பதே அறிவுடைய செயல் அல்ல, இப்படி காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்குதனமான செயலை “என் தோளில் தூக்கி சுமப்பேன்” என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சொன்னது ஒன்றும் ஆச்சரியம் அல்ல என கடுமையாகச் சாடியுள்ளார்.

இப்பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர் பாபு, இப்பிரச்சனையில் நடுநிலையோடு துலாபாரம் போல் ஒரு நல்ல முடிவை முதலமைச்சர் முக ஸ்டாலின் எடுப்பார்.  அரசு ஆதினங்களுடன் பேசி சுமூகநிலையை கிட்டும் என்றார்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.