உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 30-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி!

ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த கௌதம் அதானி, 30-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த…

ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த கௌதம் அதானி, 30-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிட்டது. அதில், அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதிநிலை அறிக்கையில் தவறாக தகவல்களை அளித்து பங்குச் சந்தைகளில் ஆதாயத்தைத் தேடுவதாக குற்றம்சாட்டியது.

இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள், பங்குசந்தைகளில் கடும் சரிவை சந்தித்தன. குழுமத்தின் நன்மதிப்பைப் பாதுகாக்க நிலுவையில் இருந்த கடன்களை அதானி குழுமம் திருப்பிச் செலுத்தியது. எனினும், அதனால் பங்குகளின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள் அதானி குழுமம் சுமார் ரூ.12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலா சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தில் அதானி இருந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சியால் சுமார் 80 பில்லியன் டாலா் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 30-வது இடத்திற்கு கௌதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இந்தியாவின் முகேஷ் அம்பானி, 80 பில்லியன் டாலா் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.