அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் குற்றசாட்டுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய செபி நிறுவனத்திற்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு ஏற்றியதாகவும், இந்த பங்கு விலை உயர்வை காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. மேலும் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை அதானி குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் அதானி குழுமம் பங்கு சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், அதானியின் பங்குகள் மிகைப்படுத்தப்பட்ட விவகாரத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தில் செபி மனு தாக்கல் செய்திருந்தது. அதற்கு மனுதாரர்களின் வக்கீல் பிரசாந்த் பூஷண், கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அதானி குழும முறைகேடு குறித்து செபி விசாரணை நடத்தி வருவதால், கால நீட்டிப்பு அளிக்க தேவையில்லை என்று வாதிட்டார். இதனால் கால அவகாசம் ரத்து செய்யப்பட்டு வழக்கு நேற்று விசாரிக்கப்பட்டது.
அப்போது செபி நிறுவனம் கூறியதாவது, “ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 12 பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்து வருகிறோம். முதல் நோக்கிலேயே, அவை மிகவும் சிக்கலானதாக தெரிகிறது. பல்வேறு சர்வதேச வங்கிகளிடமிருந்து அறிக்கைகள் பெற்று ஆராய வேண்டி உள்ளது. முழு உண்மைகளையும் அறியாமல், தவறான முடிவுக்கு வருவது முதலீட்டாளர்கள் நீதியை பெற உதவாது. ஆகவே, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்” என கூறியது.
இதனை தொடர்ந்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வைத்த குற்றச்சாட்டை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய செபி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் ஹிண்டன்பர்க் நிறுவனம் அளித்த அறிக்கையை ஆராய்ந்து தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.