ஆத்தூர் அருகே முத்துமலை முருகன் கோயிலில் திரைப்பட நடிகர் யோகி பாபு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் முத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் உலகிலேயே மிக உயரமான 146 அடி முருகன் சிலை உள்ளது. இக்கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், அரசியல் மற்றும் திரைப்பிரபலங்களும் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர்.
இன்னிலையில் திரைப்பட நடிகர் யோகி பாபு தனது குடும்பத்தாரோடு முத்துமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தை சுற்றி வந்த நடிகர் யோகி பாபு முருகன் சிலை கையில் உள்ள வேலுக்கு பாலாபிஷேகம் செய்தார்.
பின்னர் சிறப்பு பூஜையில் அலங்கரிக்கப்பட்ட முத்துமலை முருகனை தனது குடும்பத்தாரோடு தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்கிருந்த பொது மக்களுடனும், கோயில் நிர்வாகிகள் உடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.







