திரைப்பயணத்தில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் வெற்றி என்பது சாதாரண வெற்றி அல்ல. நாளைய தீர்ப்பு தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு அவரது வளர்ச்சி உச்சத்தைத் தொட்டுள்ளது திரைத்துறையில் விஜய்யின் குடும்பம் 1974ம் ஆண்டு ஜூன் 22ம்…

நடிகர் விஜய்யின் வெற்றி என்பது சாதாரண வெற்றி அல்ல. நாளைய தீர்ப்பு தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு அவரது வளர்ச்சி உச்சத்தைத் தொட்டுள்ளது
திரைத்துறையில் விஜய்யின் குடும்பம்
1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி சென்னையில் பிறந்தார் நடிகர் விஜய். இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ் திரைப்பட இயக்குநர் ஆவார். தாயார் ஷோபா பின்னணி பாடகி ஆவார். ஆக விஜய் குடும்பத்தில் அனைவரும் திரைத்துறையில் கால் பதித்தவர்கள் தான்.
விஜய் முதல் படத்தின் சுவாரஸ்யம்
விஜய்யின் 10 வயதில் வெற்றி என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை இயக்கினார். இதில் நடிகர் விஜயகாந்திற்கு குழந்தை நடிகராக அறிமுகமாகிறார் விஜய். முதல் வசனமே அறிஞர் அண்ணாவை பற்றி புத்தகத்தில் படிப்பது போல் பேசியிருப்பார்.
இயக்குநர்களுக்கு முன்மாதிரியாக ராஜாவின் பார்வையிலே
பின்னர், தனது 18வது வயதில் நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் விஜய். தொடர்ந்து பல படங்கள் அவரது தந்தை இயக்கத்தில் நடித்து வந்த விஜய், முதன்முறையாக ஜானகி சௌந்தர் இயக்கத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் அஜித்தும் நடித்திருப்பார். விஜய், அஜித் இருவரையும் வைத்து நடிக்க விரும்பும் இயக்குநர்களுக்கு இன்று வரை ராஜாவின் பார்வையிலே படம் முன்மாதிரியாக இருக்கிறது.
காதல் படங்கள் ஹிட் தான்
திரைத்துறைக்கு வந்த போது தொடர்ந்து சில படங்கள் விஜய்க்கு தோல்வியை கொடுத்தாலும், காதல் சம்பந்தமான படங்களில் விஜய் நடித்தால் அது ஹிட் தான். அதன்படி சொல்ல வேண்டும் என்றால் பூவே உனக்காக படத்திற்கு பிறகு பல இயக்குநர்களுக்கிடையே பேசுபொருளானார் நடிகர் விஜய். பல வெற்றிகள் வந்தாலும், இந்த வெற்றிக்கு பின்னால் விஜய் சந்தித்த அவமானங்கள் சிறிதல்ல.
இளைய தளபதி பட்டப்பெயர் எப்படி?
ஆரம்பக் காலகட்டத்தில் இளைய தளபதி என்ற பட்டப்பெயர் பருத்திவீரனில் நடித்த சரவணனுக்கு தான் கொடுக்கப்பட்டது.  தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி வந்த சரவணனுக்கு சேலத்தில் பாராட்டு விழா ஒன்று நடைபெற்ற போது இளைய தளபதி என்ற பட்டப்பெயர் கிடைத்துள்ளது.
பின்னர், அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இந்நிலையில், இளைய தளபதி என்ற பட்டப்பெயர் ரசிகன் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்க்கு சூட்டப்பட்டது.
பல படங்கள் சர்ச்சை
கடந்த 2013ம் ஆண்டு விஜய் நடிப்பில் தலைவா படம் வெளியானது. பொதுவாக விஜய் படம் வெளியாகும் போது அவ்வப்போது சிறு சிறு சர்ச்சைகள் வருவது வழக்கம் என்றாலும், ‘தலைவா’ படத்திற்கு தலைப்பிலேயே சர்ச்சை வந்தது. ‘டைம் டு லீட்’ என்ற டேக் லைனுடன் வெளியான தலைவா படத்தின் டைட்டில் அப்போது மிகப்பெரிய பேசு பொருளானது. இந்த டேக் லைன் விஜய்யின் அரசியல் வருகைக்கான முடிவை உறுதி செய்துள்ளது என ரசிகர்கள் பேசத் தொடங்கினர். அதன்பின் அந்த டேக் லைன் நீக்கப்பட்டு சில காட்சிகள் கத்தரிக்கப்பட்டு படம் வெளியானது. இந்தப் பிரச்னையின் போது ரசிகர்களிடம் இருந்து விஜய்க்குக் கிடைத்த ஆதரவு பிற்காலங்களில் அவர் செய்யப்போகும் சம்பவங்களுக்குத் தலையாய் அமைந்தது என்று கூடச் சொல்லலாம்.
சாதனை படைக்கும் விஜய்யின் படங்கள்
100 கோடி வசூல் சாதனை, 200 கோடி வசூல் சாதனை என தமிழ் சினிமாவை இன்று உலகமே திரும்பி பார்க்கிறது என்றால் அதற்கு பின்னால் விஜய்யின் படங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. குறிப்பாக கொரோனா காரணமாக பல திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பை உடைத்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். இப்படி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்து வருகிறது விஜய்யின் திரைப்படங்கள். தற்போது திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது விஜய்யின் 66வது படமான வாரிசு திரைப்படத்தை.
விஜய் மக்கள் இயக்கம் எப்படி உருவானது?
சினிமாவில் மட்டுமல்லாமல் தம்மால் முடிந்த உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் மூலமாக செய்து வருகிறார்.2009 ஆண்டில் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக விஜய் மாற்றினார். இதற்கு ஒரு ஆண்டு முன்னரே தனது ரசிகர் மன்றங்களுக்கென தனியே ஒரு கொடியினை அறிமுகப்படுத்தியிருந்தார். தம்மால் முடிந்த உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் மூலமாக இன்றுவரை செய்து வருகிறார் நடிகர் விஜய். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க வகையில் சில இடங்களில் வெற்றி பெற்றது விஜய் மக்கள் இயக்கம்.
விஜய் அரசியலுக்கு வருவாரா?
கடந்த மாதம் 20ம் தேதி சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தார் நடிகர் விஜய். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த  விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் தொடர்பான முடிவுகள் குறித்து விஜய்  கூறுவார் எனவும். ரசிகராக இருந்தாலும், தொண்டராக இருந்தாலும் அவர்களை சந்திப்பது தான் விஜய்யின் முதல் வேலை என தெரிவித்தார். இதன் மூலமாக விஜய் அரசியலுக்கு வருவது சூசகமாக தெரிகிறது என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
தனது தந்தை கூட நினைத்திருக்க மாட்டார் உச்சநாயகனாக விஜய் வருவார்  என்று. எப்போதும் தனது ரசிகர்களை விட்டுக்கொடுக்காத நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நாயகனாகவும், பொதுமக்களுக்கு முடிந்த அளவில் உதவிகளையும் செய்து இளைதளபதியாக மக்கள் மனதில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், திரையில் நடிகர் விஜய் கால் பதித்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த தருணத்தில் திரைத்துறையினர், அவரது நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.
– சுஷ்மா சுரேஷ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.