புதிய ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
ஒளிப்பதிவு திருத்த மசோதா கடந்த 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம், நிலைக்குழு அறிக்கையை சமா்ப்பித்தது. இப்போது, இந்த நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்தத் திருத்தச் சட்டத்தில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றிந்தாலும், நான்காவதாக இடம்பெற்றுள்ள திருத்தத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதாவது, ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு மத்திய அரசு கூட அதை திருத்த முடியாது. ஆனால், இப்போது தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை மறுமுறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழுவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலாம் என்ற திருத்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த திருத்தங்கள் தொடர்பான கருத்துகளை, பொதுமக்கள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்க இன்று கடைசி நாள். இந்த மசோதாவுக்கு திரையுலகினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவும் இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில், சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக… அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல… இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபனையைத் தெரிவியுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எதிர்ப்பு
இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஒளிப்பதிவு திருத்த மசோதா, நடைமுறைப்படுத்தப்பட்டால் கலைத்துறையில் பேச்சு சுதந்திரத்திற்கு பெரிய தாக்குதலாக இருக்கும் என்றும் இதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.







