நல்ல சிகிச்சை கிடைத்தால் பிழைப்பேன் என்று உதவி கேட்ட நடிகர், கொரோனா வால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி நடிகர் ராகுல் வோரா (Rahul Vohra). நாடக நடிகராக நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய இவர், பிறகு சினிமா மற்றும் வெப் தொடர்களில் நடித்து வந்தார். உத்தர காண்டை சேர்ந்த இவர், மனைவி ஜோதி திவாரியுடன் டெல்லியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சரியான சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனக்கு ஆக்சிஜன் படுக்கை தேவை எனக் கேட்டிருந்த அவர், முறையான சிகிச்சை கிடைத்தால் காப்பாற்றப்படுவேன் என்றும் இப்போது நம்பிக்கையை இழந்து விட் டேன்; மறுபடியும் பிறந்து நல்ல செயல்களை செய்வேன் என்றும் தனது பேஸ்புக்கில் நேற்று கூறியிருந்தார். பலர் அவருக்கு நம்பிக்கைத் தெரிவித்திருந்தனர். அவருக்கு பலர் உதவவும் முயன்றனர். ஆனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரி ழந்துவிட்டார். அவருக்கு வயது 35.
பேஸ்புக்கில் 1.9 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள நடிகர் ராகுல் வோராவின் மரணம் அவர் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏராளமானவர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல நாடக இயக்குனர் அரவிந்த் கவுர், சரியான சிகிச்சை கிடைத்திருந்தால் ராகுல் காப்பாற்றப்பட்டிருப்பார். எங்களால் உங்கள் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மன்னித்துவிடுங்கள் ராகுல் என்று கூறியுள்ளார்.







