மின்வாரிய ஒப்பந்தங்கள் குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிராகரிக்கப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்ட BGR Energy நிறுவனத்திற்கு, தற்போது 4 ஆயிரத்து 442 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார். செயற்கையாக மின்சார பற்றாக்குறையை உருவாக்கி, இதுபோன்ற தரமற்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.
தமிழ்நாட்டில் விரைவில் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாக உள்ளதாக கூறிய அண்ணாமலை, தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கிய ஒப்பந்தம் குறித்து சிஏஜி, செபிக்கு கடிதம் எழுதி விசாரணை நடத்த வலியுறுத்துவோம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சியில் மின்வாரிய ஒப்பந்தங்கள் முழுவதும் விதிகளை பின்பற்றியே நிறைவேற்றப்படுவதாக புள்ளி விவரங்களுடன் விளக்கினார். ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, சரியான புரிதலின்றி அண்ணாமலை பேசுவதாகவும் அவர் விமர்சித்தார்.
எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் என்பதை அண்ணாமலை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.







