மருத்துவ மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கிய நிலையில், சமூகநீதியைப் பாதுகாக்கும் இந்த தீர்ப்பு மகத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 சதவிகித இடஒதுக்கீட்டைத் தடுப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், இந்த ஒதுக்கீடு கிராமப்புறங்களில் மருத்துவ சேவைக்கான திட்டம் என்பது உள்ளிட்ட வாதங்களை ஏற்றுக்கொண்டு இந்த அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறினார்.
ஆட்சிப் பொறுப்பேற்றதும், மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில், OBC பிரிவினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.
சமூகநீதியை மதிக்காத ஒன்றிய பாஜக அரசுக்குப் பதிலாக சமூகநீதியைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு மகத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதே போல் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பறிக்கும் நீட் தேர்வு போராட்டத்திலும் சமூகநீதி நிச்சயம் வெல்லும் என்றும் அதற்காக திமுக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







