“இந்திய அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றதாக இருக்கிறது” – பாகிஸ்தான் அமைச்சர்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்து பொறுப்பற்றதாக இருப்பதாகவும் ஏவுகணை விழுந்ததற்கான பிரச்னை குறித்த விசாரணை வேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து ஆய்வின்…

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்து பொறுப்பற்றதாக இருப்பதாகவும் ஏவுகணை விழுந்ததற்கான பிரச்னை குறித்த விசாரணை வேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து ஆய்வின் போது தவறுதலாக ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் மார்ச் 9-ம் தேதியன்று விழுந்தது. இதனால் எந்த ஒரு உயிர் சேதமும் இல்லை என அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இதனையடுத்து, இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு ஐநாவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், இந்தியாவில் இருந்து தவறுதலாக ஏவப்பட்டதாக கூறப்படும் ஏவுகணை குறித்து தெளிவான விளக்கம் வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “இது தவறுதலாக நடந்த ஒரு விபத்து. இதற்காக நாங்கள் வருந்துகிறோம்” என கூறினார். மேலும், இந்திய ராணுவத்தினர் இது போன்ற கருவிகளை கையாள்வதில் தகுந்த பயிற்சியுடையவர்கள் எனவும் இந்த விபத்து குறித்த விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்திய அமைச்சரின் விளக்கம் திருப்திகரமாக இல்லை. தவறுதலாக ஏவப்பட்ட இந்த ஏவுகணையால் பல சேதங்கள் நிகழும் வாய்ப்பு இருந்தது” என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த சம்பவம் தொடர்பாக ஒருதலைபட்சமாக இல்லாமல் சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

மேலும், பாகிஸ்தான் பதில் தாக்குதல் செய்யுமா என்ற கேள்விக்கு, “நாங்கள் பொறுப்புடையவர்கள்” என ஷா மெஹ்மூத் குரைஷி பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.