பாஜக பந்த் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் பந்த் நடத்த விடுத்துள்ள அழைப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே…

கோவை மாவட்டத்தில் பந்த் நடத்த விடுத்துள்ள அழைப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு தடைவிதிக்க கோரி கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய
அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் காவல்துறை அனுமதி அவசியம் என்றும், ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி வாங்கியதாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில்,
இந்த பந்த் நடத்த மாநில தலைமை அழைப்பு விடுவிக்கவில்லை என்றும், கட்சியின் மாவட்ட நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதவும், பந்த் நடத்துவதா அல்லது வேறு என்ன வகையான போராட்டம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும், அதனை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும், அரசு தரப்பில் இடைக்கால உத்தரவு ஏதும் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் நடத்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை நவம்பர் 1 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.