கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் இன்னும் தண்டிக்கப்படாமல் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூன்று நாட்களாக நடத்திய தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு மூளையாக விளங்கிய முக்கிய தீவிரவாதிகளை நீதியின் முன்பு நிறுத்தாமல் பாகிஸ்தான் பாதுகாப்பதாக இந்தியா பலமுறை குற்றம்சாட்டியுள்ளது.
மும்பையில் இன்று நடந்த தீவிரவாத தடுப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் பேசும்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதனை மீண்டும் சுட்டிக்காட்டினார். தீவிரவாதத்திற்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கமிட்டியின் சிறப்புக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதல் மும்பையின் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல, அது சர்வதேச சமூகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்களை குறிவைத்தும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தாக்குதல் மூலம் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் தீவிரவாதிகள் சவால் விடுத்ததாகக் கூறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆனால் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களையும், சதியை அரங்கேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர்களையும் நீதியின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்று தருவது இன்னும் செய்து முடிக்கப்படாமலேயே இருப்பதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மும்பை தாக்குதலை அரங்கேற்றிய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் முக்கிய அங்கம் வகிப்பவராகக் கருதப்படும் ஷகீத் முகம்மதுவை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நாவில் இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சிக்கு சமீபத்தில் சீனா முட்டுக்கட்டை போட்டது. இந்நிலையில் இது குறித்தும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெய்சங்கர் மற்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் அக்டோபர் மாதத்திற்கான தலைவராக இருக்கும் கபோன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் மோசா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு தாஜ்மகால் பேலஸ் ஓட்டலில் நடந்த நிகழ்வில் அஞ்சலி செலுத்தினர்.







