ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளித்தார். இதையடுத்து, தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசமி தரப்பினர் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், தீர்ப்பு வெளியான பிறகு சென்னை உயர்நீதிமன்றம் வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை, பொதுக்குழு செல்லும் என சட்டப்படி தீர்ப்பு வந்துவிட்டது என்றார். ஒற்றைத் தலைமையின் நோக்கம் மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
அதிமுக சட்ட விதிகளின் படி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு அதிமுக சட்ட விதிகளின் படி மட்டுமே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே ஜூலை 11-ம் தேதி அன்று நடைபெற்ற பொதுக் குழு செல்லும் என நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி விட்டதாகவும், இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நீடிப்பார் என்றும் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








